இட்லி மட்டுமே விற்று தொழிலதிபர் ஆனவரின் கதை - idly iniyavan success story


[idly iniyavan success story]சாதாரண ஒரு இட்லியை விற்று ஒருவர் பெரும் பணக்காரராக மாற முடியுமா? நிச்சயம் முடியும்! அதை சாதித்தவரின் கதைதான் இந்த தொகுப்பு. இதில் அவர் பட்ட கஷ்டங்களையும் துன்பங்களையும் அதையும் தாண்டி வெற்றி பெற்றிருக்கும் அவருடைய அனுபவத்தையும் அவர் கூறுவது போலவே இந்த தொகுப்பில் காண்போம்.  (Tamil motivational stories). (Motivationbala.blogspot.com)

என் பெயர் இனியவன். அனைவரும் என்னை இட்லி இனியவன். என்று அழைப்பார்கள். நான் கோவையில் மிகவும் ஏழ்மையான ஒரு குடும்பத்தில் பிறந்தவன் என் உடன் பிறந்தோர் மொத்தம் 10 பேர். தினமும் மூன்று வேளை உணவிற்கே கஷ்டப்படும் சூழல். நான் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். அதுவும் தினமும் பள்ளியில் கிடைக்கும் இலவச மதிய உணவிற்காக தான் நான் பள்ளிக்கு சென்றேன். சனி மற்றும் ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் உணவிற்கு என்ன செய்வது?என்று தெரியாமல் எங்கள் ஊரில் பிரபலமான சாந்தி பேக்கரியில் வேலைக்கு சேர்ந்தேன். எனக்கு சம்பளம் ஒரு ரூபாய் 20 காசுகள் மட்டுமே.அதுபோக இரண்டு வேளையும் உணவு கிடைக்கும். கோவையில் பன் பட்டர் ஜாம் மிகவும் பிரபலமான ஒன்று. சற்று விலை அதிகமாக உள்ளதால் ஒரு அளவிற்கு வசதி படைத்தோர் மட்டுமே அதிகம் அதை வாங்கி ருசிப்பர். அப்படி ஒரு நாள் நான் வேலை பார்க்கும் பேக்கரியில் மிடுக்கான ஒருவர் வந்து பன் பட்டர் ஜாம் மற்றும் காபி ஆகியவற்றை வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சற்று நேரத்தில் அதில் ஒரு பாதியை மட்டும் வைத்துவிட்டு சிறிது காப்பியையும் வைத்துவிட்டு வெளியே சென்றார். அவரைப் பார்த்துக் கொண்டிருந்த நான். அவர் சென்ற உடன் அந்த டேபிளை சுத்தம் செய்து அவர் மிச்சம் வைத்திருந்த அந்த ஒரு பாதியை என் வாயில் போட்டுக்கொண்டேன். சிறிது நேரத்தில் அவர் திரும்ப வந்தார். டேபிளில் இருந்த காபி அவர் மிச்சம் வைத்த பாதி எதுவும் இல்லை. இதை கவனித்துக் கொண்டிருந்த முதலாளி என் தலையில் கொட்டி திட்டிவிட்டார். எனக்கு அந்த சம்பவம் மிகவும் கஷ்டமாக இருந்தது. என்னை அந்த நிலைக்கு காரணம் ஆக்கியது எனது வறுமை மட்டுமே. அதிலிருந்து மீள வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே எனக்கு தோன்றியது. ஆனால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது  எனக்கு அப்போது தெரியவில்லை. கிடைத்த வேலைகளை செய்து கொண்டு எதிலும் நிலை இல்லாமல் இருந்த காலகட்டம் அது. ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பின்பு ஆட்டோ ஓட்டுனராக மாறினேன். எந்த பணி செய்தாலும் அதில் முழு ஈடுபாடுடன் செய்யவேண்டும் என்ற எண்ணம் மட்டும் என்னுள் எப்பொழுதும் இருந்தது. ஒரு சமயம் ஆட்டோவில் ஒரு அம்மாவை ஏற்றிக் கொண்டு சென்றபோது அவர் கூறிய இடத்தில் இறக்கிவிட்டு, எப்போதும் மற்ற ஆட்டோ ஓட்டுனர்கள் வசூலிக்கும் தொகையைவிட ஐந்து ரூபாய் குறைவாக வசூலித்தேன். அப்போது அந்த அம்மா சரிப்பா, நீ செல் சிறிது நேரம் ஆகும் நான் வேறு ஆட்டோ பிடித்துக் கொள்கிறேன் என்றார். நான் சொன்னேன், நீங்கள் உங்கள் வேலையை முடித்துவிட்டு திரும்ப வாருங்கள் நான் இங்கே இருந்தால் என்னுடைய ஆட்டோவிலேயே வாருங்கள் என்றேன். அவரும் அரை மணி நேரத்தில் தன் வேலையை முடித்துக்கொண்டு திரும்ப வந்தார். என்னைப் பார்த்தவுடன் என்னுடைய ஆட்டோவில் ஏறிக்கொண்டார். நான் அவரை அழைத்துக் கொண்டு அவர் இறங்கும் இடத்தில் இறக்கிவிட்டேன். மற்றவர்கள் வசூலிக்கும் தொகையை விட நான் பத்து ரூபாய் வரை கம்மியாகவே வாங்கியிருந்தேன். வெயிட்டிங் சார்ஜ் என்று எதுவும் வாங்கவில்லை. ஆகையால் அந்த அம்மாவிற்கு என் மீது மதிப்பு அதிகமானது.அவருடைய அக்கம்பக்கம் வீடுகளிலும் என்னைப் பற்றி நல்லவிதமாக கூறினார். வாடிக்கையாளரிடம் நாம் எவ்வளவு கனிவாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்கிறோமோ அந்த அளவிற்கு நம் மீது அவர்களுக்கு மதிப்பு உயரும். இது நான் கற்றுக்கொண்ட பாடம்.
ஒரு சமயம் நான் சவாரிக்காக சென்று கொண்டிருந்தபோது ஒரு அம்மா பெரிய பாத்திரத்தை வைத்துக்கொண்டு எனது ஆட்டோவை அழைத்தார்கள். அவருடன் சேர்ந்து அந்தப் பாத்திரத்தை தூக்கி ஆட்டோவில் வைத்துக்கொண்டு அவர் கூறிய இடத்திற்கு அழைத்துச் சென்றேன். அவரை இறக்கி விட்டு நான் திரும்ப முயற்சித்தபோது அவர் அங்கேயே நின்று கொண்டிருந்தார். நான் அவரிடம் ஏன்மா வீட்டுக்கு செல்ல வில்லையா என்று கேட்டேன். அவர் தன் கணவருக்காக காத்திருப்பதாகவும், அவர் வந்தவுடன் அந்தப் பெரிய பாத்திரத்தை எடுத்துக்கொண்டு மேலே செல்லவேண்டும் என்றும் கூறினார். நான் உதவி செய்கிறேன் அம்மா! என்று கூறி அந்த பாத்திரத்தை இருவரும் பிடித்துக்கொண்டு மேலே சென்றோம். அந்த பாத்திரத்தை திறந்தால் முழுவதும் இட்லிமாவு. அதுபற்றி நான் விசாரித்த போது, அந்த அம்மா தான் தினமும் வெளியே சென்று மாவு அரைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து இட்லி ஊற்றி அதை ஹோட்டல்களுக்கு சப்ளை செய்வதாகவும் தெரிவித்தார். கடைக்காரர்கள் சட்னி சாம்பார் மட்டும் வைத்துக்கொண்டு இவரிடம் இட்லி வாங்கி ஹோட்டலுக்கு வருவோருக்கு உணவளித்து வந்தனர். இதில் அந்த அம்மாவிற்கு ஒரு சிறிய லாபம் கிடைத்து வந்தது. அந்த அம்மா என்னிடம், ஹோட்டலுக்கு சென்று தினசரி இட்லி சப்ளை செய்யவேண்டும்.  ஆனால் நீங்கள் கேட்கும் அளவிற்கு என்னிடம் பணம் கிடையாது ஒரு சிறிய தொகை தருகிறேன். காலை 7 மணிக்கு சப்ளை தர வேண்டும் என்று அந்த அம்மா என்னிடம் கேட்டார். நான் சரிம்மா ஒரு வாரம் நான் சப்ளை  செய்கிறேன். எனக்கு கட்டுபடி ஆனால் தொடர்ந்து செய்கிறேன் என்றேன். அவரும் சம்மதித்தார் அடுத்த நாளே அவரிடம் இட்லி வாங்கிக் கொண்டு கடைகளுக்கு சென்றேன். தினசரி 5 முதல் 10 இட்லி வரை கூடுதலாக எடுத்துக்கொள்வேன். செல்லும் வழியில் புதிதாக உள்ள ஹோட்டல்களுக்கு ஒவ்வொரு இட்லியாக கொடுத்து  அவர்களிடம் ஆர்டர் எடுத்தேன். ஒரே மாதத்தில் 250 இட்லிகள் விற்ற இடத்தில் 2000 இட்லிகள் வரை விற்பனையாகின. நான் வந்த ராசியில் தான் வியாபாரம் பெருகியது என்று அந்த அம்மா அடிக்கடி கூறுவார். ஆனால் கடின உழைப்பினால் மட்டுமே வியாபாரம் பெருகியது என்பது எனக்கு தெரியும். இப்படியே நாட்கள் நகர நகர இட்லி ஊற்றும் பதம் அதில் உள்ள நுணுக்கங்கள் ஆகியவற்றை படிப்படியாக கற்றுக் கொண்டேன். சென்னையில் ஒரு ஹோட்டலில் இட்லி ஆர்டர்கள் கிடைத்தன. இதற்கு நம்பிக்கையான ஒரு ஆள் அங்கே செல்ல வேண்டி இருந்தது. அந்த அம்மா என்னை அனுப்பினார். நானும் சென்று சிறிது காலம் அங்கே பணியாற்றினேன் ஆர்டர்கள் முடிந்தவுடன் வேறு ஆர்டர் கிடைக்காததால் நான் கோவைக்கு வந்தேன். அங்கே நான் செய்துகொண்டிருந்த வேலையை வேறு ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார். ஆகையால் நான் திரும்ப சென்னைக்கு சென்றேன் இந்த முறை தனியாகவே ஆர்டர்கள் எடுத்து விற்பனை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் இட்லி பாத்திரங்கள் அரிசி உளுந்து அடுப்பு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு ஆர் கே நகரில் சிறிய குடிசை அமைத்து தங்கினேன். நான் கொண்டுவந்திருந்த பாத்திரங்களை வைத்து இட்லி தயார் செய்து ஹோட்டல்களுக்கு தர ஆரம்பித்தேன். ஒரு நாள் இரவு நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது  மழை பெய்ய தொடங்கியது.என் வீடு முழுவதும் வெள்ளத்தில் மிதந்தது  நான் கொண்டுவந்திருந்த அரிசி, உளுந்து ஆகியவை தண்ணீரில் ஊறின. பாத்திரங்கள் மிதந்தது. எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை சற்று மேடான பகுதிக்கு சென்று பக்கத்து கடையில் ஒரு கோணிப்பை கடனாக வாங்கிக் கொண்டு  பிளாட்பார்மில் தங்கினேன். 20 நாட்கள் அங்கே இருந்தேன் மிகவும் கஷ்டமான காலகட்டம் அது. ஆனால் இதுவும் கடந்து போகும் என்ற எண்ணம் மட்டும் எனக்குள் இருந்தது. 20 நாட்களுக்கு பிறகு தண்ணீர் வடிந்தவுடன் என் வீட்டிற்கு சென்று திரும்ப இட்லி தயார் செய்ய ஆரம்பித்தேன். ஹோட்டல் ஹோட்டலாக அலைந்து ஆர்டர்கள் எடுத்தேன். வியாபாரம் சற்று வளர்ந்தது கோவையில் திருமண மண்டபங்களில் உணவு தயார் செய்த அனுபவம் இருந்ததால் சென்னையிலும் திருமண மண்டபங்களை அனுகினேன். ஆனால் முதல் சந்திப்பில் யாரும் ஆர்டர்கள் தரவில்லை. அதற்காக நான் சோர்ந்து போகவில்லை கடிதங்கள் எழுதினேன். அனைத்து மண்டபங்களுக்கும் கொடுத்தேன். ஒரு சிலர் ஆர்டர் தர முன்வந்தனர். நல்ல முறையில் தொழிலும் வளர்ந்தது. காலப்போக்கில் இட்லியின் வடிவத்தை சிறிது மாற்றினால் என்ன? என்ற யோசனை எனக்குள் வந்தது.. அப்படி தயார் செய்த சில வகைகள் தான் இளநீர் இட்லி, புதினா இட்லி, சோள இட்லி, ராகி இட்லி, சிறுதானிய இட்லி ,ஆரஞ்சு இட்லி, ஆப்பிள் இட்லி.மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. 2015 இல் 124 கிலோவில் ஒரே இட்லியை செய்தேன். ஆனால் கின்னஸில் இடம் கிடைக்கவில்லை.

பின்பு விடாமுயற்சியுடன் 2000 வகை இட்லிகளை தயார் செய்தேன். அது கின்னஸ் ரெக்கார்டு ஆக மாறியது. தற்போது எனக்கு டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது. இட்லி இனியவன் என்ற பெயரும் கிடைத்துள்ளது .இன்று நான் ஒரு தொழில் முனைவோராக பல பேருக்கு வேலை கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். ஆனால் சிறிய வயதில் நான் பட்ட கஷ்டங்களும், வலிகளும், மனம் தளராத என்னுடைய தன்னம்பிக்கையும் தான் இன்று இந்த பெயர் கிடைக்க காரணம். ஆகையால் உழைத்தால் என்றுமே உயர்வு இது எந்த தொழிலிலும் பொருந்தும். "நன்றி"

Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Very nice motivational story. Keep going

    ReplyDelete
  3. Superb...very inspirational... Keep uploading more stories... Share this to Mr. Iniyavan... He will be happy

    ReplyDelete

Post a Comment

Kindly support our blog

Popular posts from this blog

யார் இந்த பீலா ராஜேஷ்? Who is beela Rajesh?

கோபி சுதாகர் வெற்றிக்கு பின்னால்? Struggles behind the success of Parithabangal Gopi and Sudhakar